வணங்குகின்றேன். .


எழுதிமுடித்தவன் அரைக்கவிஞன் - நல்ல

விமர்சகன் கிடைத்தால் முழுக்கவிஞன் !

Tuesday, August 7, 2012

thirumandhirum part 1



என்றும் அன்புடன்Drஆ ச கந்தன் / DrA S Kandhan

திருமந்திரம் - முதல்பாகம்

திருவொற்றியூர் பாரதிபாசறை சார்பில் முனைவர் புலவர் மா கி இரமணன் எட்டாண்டு காலம் தொடர்சொற்பொழிவினை மாதம் ஒரு சொற்பொழிவாக நிகழ்த்தி நிறைவு செய்தார்.
இது எட்டாண்டுக்கு முன்னர் துவக்கவிழாவில் கவிமலராக வாசிக்கப்பட்டது. . .

என்றென்றும் திருமந்திரம்

முடிதுறந்து காடேகிய இராமனுக்கு
விஷஅம்பெனும் தந்தைசொல் ஒருமந்திரம்

யாக யோகம் கற்றும் இராவணனுக்கு
அசுரகுல அன்னைசொல் ஒருமந்திரம்

சூதாடித் தோற்கினும் பாண்டவருக்கு
வாக்குதவறா அண்ணன்சொல் ஒருமந்திரம்

கொடுக்காத வித்தைக்கும் காணிக்கை
ஏகலைவனுக்கு ஆசாரியன்சொல் ஒருமந்திரம்

புராணகால மனைவியர் இல்லறநெறியில்
கைபிடித்த கணவன்சொல் ஒருமந்திரம்

நவீனகால கணவருக்கில்லை வேறுவழி
நல்சுகம்தரும் மனைவிசொல் ஒருமந்திரம்

எண்ணற்ற மந்திரங்கள் யாவர்க்குமே
பயன்கருதி வேறுபடும் அவரவர்க்குமே

தடுமாறாது கொடும்பகை முடித்திடவே
உதவவரும் பஞ்சதந்திரம் ஒருமந்திரம்

அறம் பொருள் வீடுபேறு பெற்றிட
வகைசொல்லும் நவதந்திரம் திருமந்திரம்

மூலன்செய்த மூவாயிரம் திருமந்திரம்
வல்வினை நிர்மூலம் செயும் திருமந்திரம்

திருமந்திரம் திருமந்திரம்
என்றென்றும் திருமந்திரம்

திருமந்திரம் திருமந்திரம்
நன்றென்றும் திருமந்திரம்

Tuesday, May 8, 2012

சுஜாதாவின் நினைவினில்...நானும் என்கவிதையும்- 'பிரசவவேதனை' பற்றி. .

பொதுவாக பெண்மை முழுமைபெறுவது தாய்மையில்தான் என்று சொல்வதுண்டு .
பிள்ளைப்பேறு அமையப்பெறாதவர்கூட தாயுள்ளம் கொள்ளும்போது முழுமைபெறுவர்.
தாய்மைப்பேறுக்கு சோதனையாய் இயற்கை
விதித்திருப்பது பிரசவவேதனை.
இந்தப்பிரசவவேதனை பெண் சம்மந்தப்பட்டது மட்டும்தானா? விடைகாண முயல்கிறது இந்தக்கவிதை!
குமுதம் வார ஏட்டில் சில வருடங்களுக்கு முன் சுஜாதா அவர்அவர்கள் ஹக்கு ஹபென் முதலான ஜப்பானிய செய்யுள் வடிவங்களை விளக்கி,வாசகர்களை எழுதப்பணித்தார்,இந்தக்கவிதையின் மையக்கருவின் வரிகளை நான் எழுதி அனுப்பியபோது அது சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குமுதத்தில் பிரசுரமான கவிதைகளில் ஒன்றாக இடம்பெற்று எனக்கு மகிழ்வையும் பெருமையும் சேர்த்தது;
சுஜாதா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சில நாட்களுக்கு முன் திரு நடராஜன் அய்யா சிறப்பாக பதிவு வெளியிட்டபோது நண்பர் கிரி அந்த பதிவிற்கு இணைப்புதர நான் இரண்டிலும் இதை பின்னூட்டமாய் எழுதினேன்;பதிப்பித்த இருவர்க்கும் நன்றி.
இதோ அந்தக்கவிதை!

பிரசவ வேதனை

*கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

*வயிற்றில் வலியென்றதும்
தன்நெஞ்சில் வலிகொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக் கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

*வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு - வழி - யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு

*மருத்துவமனை நீங்கும்வேளை

கட்டணப் பணத்தைப்
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக்காரினில் சுமந்து

*வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு ,

நாளைய கேள்வி-

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா!

Sunday, February 26, 2012

என் கவிதை- "விழுங்கிட்டான்" பற்றி. . .

மருத்துவனான எனக்கு பொதுவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே அதிக வாடிக்கையாளர்கள் .வைத்தியம் ஆனபிறகு பணம் கொடுப்பதில் சிலசமயங்களில் கொஞ்சம் தாமதப் படுத்துவார்கள்.பணம் பெறும்போது உற்று கவனிக்கும்போதுதான் மூக்குத்தியோ கம்மலோ கழற்றப்பட்டிருப்பது தெரியும்.அந்தக்காலத்தில் எல்லாம் சந்துக்குச்சந்து மார்வாடிக்கடைகள். என் உதவியாளர் மூலமாக எளியமக்கள் எதர்பாராத செலவுகளை 'சமாளிக்கும்' முறைகளை அறிந்தேன். நெருடலாக இருந்தாலும் யதார்த்தநிலையில் வாழ்கைமுறை பழகிப்போனது
இந்தச்சூழ்நிலையில் குழந்தை காசுவிழுங்கிவிட்டால் ( அப்போதேல்லாம் 25பைசாதான் சின்னது) அதன் பாதிப்பாகவே இந்தக்கவிதை.
இந்தப்பின்னணியில் கவிதையை மீண்டும் படித்துப்பார்க்கவும். உதட்டில் ஏற்பட்ட புன்முறுவலை புறந்தள்ளி அந்த ஏழைத்தாயைப் போலவே உங்கள் இதயமும் கொஞ்சம் கனத்துப்போகலாம். . .
பாரதிபாசறைசெயலர் முனைவர் மா கி இரமணன் என்னை அறிமுகப்படுத்தும்போதெல்லாம் இந்தக்கவிதையை எனக்கு அடையாளப்படுத்து
வார். அணிந்துரை நல்கிய முனைவர் ஔவை நடராசனார் அவர்களும் தனக்கு நெருக்கமான புலவர் பு சி கிருஷ்ணமூர்த்தியிடம் ' குழந்தை விழுங்கியது ஒரு ரூபாய்; மருத்துவரிடம் சென்றேன்-மருத்துவர் விழுங்கினார் நூறு ரூபாய்' என்று எழுதியவர்தானே என்று நினைவுகூறுவாராம்.
இந்தவருடத்து (2011)சாலமன்பாப்பையா அவர்களின் தீபாவளி பட்டிமன்றத்தில் பேராசிரியர் ஒருவர், இந்தக் கவிதையின்கருவை கதையாகச்சொல்லி தன் வாதத்திற்கு
வலு சேர்த்தார். தன்கவிதை ஏதோவொரு வடிவத்தில் பேசப்படும்போது படைப்பாளிக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது--
" செய்யும்வரைதான் சிலை சிற்பிக்குச் சொந்தம் ; செய்துமுடித்து கண்திறந்துவிட்டால்
எல்லோருக்கும் சொந்தமாகிவிடும்,--
கவிதைகூட அப்படித்தானோ. . .!
இதோ அந்தக் கவிதை
-----=----====---------=----==---

"விழுங்கிட்டான்"

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை
திடீரெனத் தாவி விட்டது
குழந்தையின் வயிற்றுக்கு.
பதைத்துப்போனாள் தாய்
மூக்குத்தியை தடவியபடி-
'விழுங்கிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய்'

Wednesday, February 22, 2012

நானும் என்கவிதைகளும்

வணக்கம். நையாண்டிமேளம் என்பது 2000 ல் வெளியாகி தமிழறிஞர்களாலும் கவிதை சுவைஞர்களாலும் பாராட்டப்பட்ட என் கவிதை நூல்; இதுவே இந்த வலைப்பூவிற்கும் தலைப்பாகிவிட்டது!
விளம்பர வெளிச்சத்திற்குள் இல்லாத கவிஞர்களின் நல்ல கவித்துவ வரிகள் பல மேடைகளில் கையாளப்பட்டாலும் அதன் படைப்பாளிக்கு அடையாளமோ அங்கீகாரமோ கிடைக்காமல் போவது துரதிஷ்டமே !
என் கவிதை நறுக்கு அந்தமான் காதலி திரைப்படத்தில் ஒரு வசனமாக இடம்பெற்றது; இப்போது சாலமன்பாப்பையா பட்டிமன்றத்தில் "விழுங்கிட்டான்" என்ற என்கவிதை கையாளப்பட்டது.
தன்னுடைய நல்ல கவிதைகளை வாசகர்களிடம் சேர்ப்பதற்கு இப்போது கூடுதல்
வசதி கிடைத்திருப்பது அதிருஷ்டமே .
முதலில் வல்லிக்கண்ணன், தாமரைசெந்தூர்பாண்டி, அவ்வைநடராசனார்,ஞானக்கூத்தன் முதலான பெருமக்களின் அணிந்துரைகளைக் குறிப்பிடுகின்றேன், நன்றி . .