வணங்குகின்றேன். .


எழுதிமுடித்தவன் அரைக்கவிஞன் - நல்ல

விமர்சகன் கிடைத்தால் முழுக்கவிஞன் !

Tuesday, May 8, 2012

சுஜாதாவின் நினைவினில்...நானும் என்கவிதையும்- 'பிரசவவேதனை' பற்றி. .

பொதுவாக பெண்மை முழுமைபெறுவது தாய்மையில்தான் என்று சொல்வதுண்டு .
பிள்ளைப்பேறு அமையப்பெறாதவர்கூட தாயுள்ளம் கொள்ளும்போது முழுமைபெறுவர்.
தாய்மைப்பேறுக்கு சோதனையாய் இயற்கை
விதித்திருப்பது பிரசவவேதனை.
இந்தப்பிரசவவேதனை பெண் சம்மந்தப்பட்டது மட்டும்தானா? விடைகாண முயல்கிறது இந்தக்கவிதை!
குமுதம் வார ஏட்டில் சில வருடங்களுக்கு முன் சுஜாதா அவர்அவர்கள் ஹக்கு ஹபென் முதலான ஜப்பானிய செய்யுள் வடிவங்களை விளக்கி,வாசகர்களை எழுதப்பணித்தார்,இந்தக்கவிதையின் மையக்கருவின் வரிகளை நான் எழுதி அனுப்பியபோது அது சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குமுதத்தில் பிரசுரமான கவிதைகளில் ஒன்றாக இடம்பெற்று எனக்கு மகிழ்வையும் பெருமையும் சேர்த்தது;
சுஜாதா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சில நாட்களுக்கு முன் திரு நடராஜன் அய்யா சிறப்பாக பதிவு வெளியிட்டபோது நண்பர் கிரி அந்த பதிவிற்கு இணைப்புதர நான் இரண்டிலும் இதை பின்னூட்டமாய் எழுதினேன்;பதிப்பித்த இருவர்க்கும் நன்றி.
இதோ அந்தக்கவிதை!

பிரசவ வேதனை

*கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

*வயிற்றில் வலியென்றதும்
தன்நெஞ்சில் வலிகொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக் கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

*வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு - வழி - யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு

*மருத்துவமனை நீங்கும்வேளை

கட்டணப் பணத்தைப்
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக்காரினில் சுமந்து

*வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு ,

நாளைய கேள்வி-

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா!